கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கோத்தகிரி அருகே கோவிலை சுற்றி அமைக்கப்பட்ட வேலியை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கோவிலை சுற்றி அமைக்கப்பட்ட வேலியை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரங்கநாதர் கோவில்
கோத்தகிரி கோடநாடு அருகே சுண்டட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு சொந்தமான ஹாலமலை ரங்கநாதர் கோவில், கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் கெரடாமட்டம் பகுதியில் இருக்கிறது. அவர்கள் கோவிலில் வழிபட்டு வருகின்றனர்.
இக்கோவில் வளாகத்தில் சமூக விரோதிகள் அமர்ந்து மதுஅருந்துதல், சீட்டு விளையாடுதல், அசைவ உணவுகள் சமைப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், கோவிலின் புனிதத் தன்மையைப் பாதுகாக்க வேண்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவிலை சுற்றி கிராம மக்கள் பாதுகாப்பு வேலி அமைத்தனர். இந்தநிலையில் நேற்று கோத்தகிரி தாசில்தார் காயத்ரி தலைமையில் வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் சென்று, அனுமதி பெறாமல் வேலி அமைத்து உள்ளதாகவும், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும் கூறி, அந்த வேலியை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
அதிகாரிகளுடன் வாக்குவாதம்
இதை அறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். மேலும் வேலி கம்பங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர், தாசில்தார் காயத்ரி மற்றும் வருவாய்த் துறையினர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இருப்பினும், கிராம மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதன் காரணமாக கோடநாடு செல்லும் சாலையில் அமைந்துள்ள கெரடாமட்டம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றும் முடிவை கைவிட்டு திரும்பி சென்றனர். பின்னர் கிராம மக்கள் அகற்றப்பட்ட வேலி கம்பங்களை மீண்டும் நட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.