ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு
திருச்செந்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அவ்வப்போது பாதாள சாக்கடை திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்பு தொட்டிகள் ஆங்காங்கே நிரம்பி கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் பொதுமக்களும், பக்தர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் திருச்செந்தூர் கோவில் வடக்கு டோல்கேட் பகுதி கோவில் தெருவில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகால், ஓட்டல் தமிழ்நாடு பகுதி வழியாக கடலில் கலக்கிறது. இதனால் கடலின் புனிதத்தன்மை கெட்டுப்போவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, அந்த வடிகாலில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கும், அதில் விடுதி, ஓட்டல்களில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை துண்டிப்பதற்கும் நேற்று திடீரென நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன் தலைமையில் பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் கழிவு நீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வந்தனர்.
மேலும் அப்பகுதியில் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கூறினால் எப்படி அகற்ற முடியும் என வியாபாரிகள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என கேட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.