கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு

கோயம்புத்தூர்

கோவை

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்காததால் கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தில் பலி

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 39). லேத் பட்டறை தொழிலாளி. இவர் கடந்த 5-8-2011-ம் ஆண்டு தனது சகோதரர் முரளி கிருஷ்ணன் (38). என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் வால்பாறையில் உள்ள சோலையார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வனத்துறைக்கு சொந்தமான வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதில் முரளி கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமானார். இந்த விபத்தில் உரிய இழப்பீடு வழங்க கோரி சத்தியமூர்த்தியின் மனைவி சுகந்தி மற்றும் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று குணமடைந்த முரளிகிருஷ்ணன் ஆகியோர் சேலம் மாவட்ட சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி தீர்ப்பு வெளியானது.

ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு

அதில் சத்தியமூர்த்தி குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.20 லட்சத்து 40 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், முரளி கிருஷ்ணனுக்கு ரூ.20 லட்சத்து 11 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி அரசு தரப்பில் இருந்து 50 சதவீத இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.34 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து மீதமுள்ள இழப்பீட்டு தொகையை வழங்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள 4-வது கூடுதல் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனுவை 2020-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்காததால் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்ய கடந்த ஜனவாி மாதம் 3-ந் தேதி நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் உத்தரவிட்டார்.

ஆனால் அப்போது ஜப்தி செய்யப்படவில்லை. இதையடுத்து கடந்த 23-ந் தேதி மீண்டும் கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி மறு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கோவை கோர்ட்டு அமீனா மருதையன், சேலம் கோர்ட்டு அமீனா சண்முகம் ஆகியோர் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை 10 மணியளவில் வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தற்காலிகமாக ஒத்திவைப்பு

இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 1 கார், 3 ஜீப், 25 கணினி போன்ற ரூ.34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் அவர்களிடம் வந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மனுதாரர்களுக்கு அறிவிப்பு கொடுக்காமல் குறிப்பிட்ட தொகை ஏற்கனவே கடந்த 24-ந் தேதி சேலம் மாவட்ட கோர்ட்டில் செலுத்தப்பட்டு விட்டது என்று அதற்கான ஆவணங்களை காட்டினார்.

மேலும் மீதமுள்ள தொகையை வட்டியுடன் சேர்த்து கோர்ட்டில் செலுத்தப்படும் என்று அளித்ததால் இந்த ஜப்தி நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைத்து விட்டு மதியம் 1.30 மணியளவில் அங்கு இருந்து அமீனாக்கள் புறப்பட்டு சென்றனர். அப்போது மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் சதீஷ்குமார், மலர்க்கொடி ஆகியோர் உடன் வந்து இருந்தனர்.


Next Story