பள்ளியில் ஆசிரியைகள், மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
அரசு பள்ளி தையல் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சக ஆசிரியைகள், மாணவிகள் நடத்திய உள்ளிருப்பு போராட்டம் எதிரொலியாக தலைமை ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
குடியாத்தம்
அரசு பள்ளி தையல் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சக ஆசிரியைகள், மாணவிகள் நடத்திய உள்ளிருப்பு போராட்டம் எதிரொலியாக தலைமை ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
தையல் ஆசிரியை தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை உள்பட 28 ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர். 640 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப் பள்ளியில் குடியாத்தம் காமாட்சியம்மன் கார்டன் பகுதியைச் சேர்ந்த நாகேஸ்வரி (வயது 56) என்பவர் தையல் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை விடுமுறை முடிந்து பணியில் சேர வந்தபோது தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலின் அவரை பணியாற்ற அனுமதிக்காமல் பல மணி நேரம் நிற்க வைத்து அனுப்பி உள்ளார்.
மேலும் பலமுறை அவருக்கு பல்வேறு வகையில் 'டார்ச்சர்' செய்ததால் மன உளைச்சலுடன் வீட்டுக்குச் சென்ற ஆசிரியை நாகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலினே காரணம் என குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
எம்.எல்.ஏ.விடம் புகார்
மேலும் தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலின் செய்யும் கொடுமைகள் குறித்து குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அமலுவிஜயனிடம் பள்ளி ஆசிரியைகள் கண்ணீருடன் புகார் மனுவும் அளித்தனர்.
அந்த மனுவை கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலருக்கு அமலுவிஜயன் எம்.எல்.ஏ.அனுப்பி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.
உள்ளிருப்பு போராட்டம்
இந்்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை நாகேஸ்வரிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
தொடர்ந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் திடீரென தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலினை மாற்ற வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் விஜயகுமார், நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் கோபி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரிையகள் மற்றும் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து கலெக்டரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதி அளித்தனர் அதனை தொடர்ந்து அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
பணியிடைநீக்கம்
இந்த நிலையில் தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலினை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி உத்தரவிட்டார். மேலும் அவர் பள்ளிக்கு வந்து ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினார்.
தையல் ஆசிரியை தற்கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.