இளம்பெண்களுக்கு பானம் இலவசம் என்ற நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு


இளம்பெண்களுக்கு பானம் இலவசம் என்ற நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு
x

இளம்பெண்களுக்கு பானம் இலவசம் என்ற நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் தனியார் ஓட்டலில் நாளை நடக்கும் இரவு நிகழ்ச்சியில் இளம்பெண்களுக்கு பானம் இலவசம் என்ற விளம்பரத்துக்கு அரசியல் கட்சியினர், அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனியார் ஓட்டலில் வித்தியாசமான நிகழ்ச்சி

திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. பார், மசாஜ் சென்டர், உணவகம், தங்கும் அறைகள், விழா அரங்கு உள்ளிட்டவை ஒரே இடத்தில் அமைந்துள்ளன. இந்த ஓட்டலின் சார்பில் வித்தியாசமான அதே சமயத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டனர். டிஜே நைட் பார்ட்டி என்ற பெயரில் நாளை (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்கும் என்றும், அந்த பார்ட்டியில் தம்பதி, பெண்களுக்கு நுழைவு அனுமதி இலவசம் என்றும், குறிப்பாக பெண்களுக்கு பானம் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பெண்களுக்கு பானம் இலவசம் என்பது மதுபானமா? என்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல் அந்த அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. முதல்முறையாக திருப்பூரில் நடக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விளம்பரம் சமூக வலைதளத்தில் நேற்று கடுமையாக பரவியது. இதைப்பார்த்ததும் பா.ஜனதா, இந்து முன்னணி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். பா.ஜனதா சார்பில் சம்பந்தப்பட்ட ஓட்டல் முன் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சி ரத்து

இந்த விளம்பரம் கடுமையாக பரவியதை பார்த்ததும் திருப்பூர் மாநகர போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் ஓட்டல் தரப்பினரிடம் விசாரித்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பி வருவதால் நாளை நடைபெறும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக சம்பந்தப்பட்ட கிளப் தரப்பில் இருந்து தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த ஓட்டல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருப்பூரில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும்கட்சி மக்கள் பிரதிநிதிகள் திறப்பு விழாவில் பங்கேற்றார்கள்.

தொழில் நகரான திருப்பூரில் வசதிபடைத்தவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இதுபோன்ற ஓட்டல்களுக்கு இளைஞர்கள், ஆண்கள் அதிகம் செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சனிக்கிழமை என்றால் அன்று கடும் பிசியாகவே காணப்படும். குடும்பமாகவும் செல்வது சமீபத்தில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இளம்பெண்களை குறி வைத்து இதுபோன்ற விளம்பரங்கள் பேராபத்தாகவே முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.

உரிய நடவடிக்கை

ஏற்கனவே மேலைநாட்டு கலாசாரத்தால் இந்திய கலாசாரம் சீரழிந்து வரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே தடுத்து நிறுத்த வேண்டும். இந்த கலாசாரம் திருப்பூரில் பரவவிடக்கூடாது. இதை காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். நாகரீகம், புதுமை என்ற பெயரில் வெளியான விளம்பரத்தால் திருப்பூரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

----


Next Story