திருச்சியில் நேற்று மதியம் திடீரென அரைமணிநேரம் கோடை மழை
திருச்சியில் நேற்று மதியம் திடீரென அரைமணிநேரம் கோடை மழை பெய்தது.
திருச்சியில் நேற்று மதியம் திடீரென அரைமணிநேரம் கோடை மழை பெய்தது.
பரவலாக மழை
திருச்சியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தாலும், கடந்த ஓரிரு நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் ஒரு புறம் இருந்தாலும், இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் இருந்தது. தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு மேல் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு சூழ்ந்து மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் விடாமல் ஒரே சீராக பெய்து கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர்புகுந்தது. சாலையோரங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது. இந்த திடீர் மழையை எதிர்பார்க்காததால் சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் நனைந்தபடி சென்றனர்.
மேலும் சிலர் சுதாரித்துக்கொண்டு வண்டியை ஓரமாக நிறுத்தி மழைக்கு ஒதுங்கி, மழை நின்ற பின் சென்றனர். இந்த மழை பெய்து முடிந்த பின் மீண்டும் வெயில் அடிக்க தொடங்கியது. அதன்பின் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திருச்சியில் அவ்வப்போது பெய்யும் மழை வெயிலுக்கு இதமாக இருந்து வருகிறது.
துறையூர், தா.பேட்டை
இதேபோல் நேற்று மாலையில் துறையூர், உப்பிலியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தூறல் மழை பெய்தது. தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.