நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றியதால் பதற்றம்


நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றியதால் பதற்றம்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பா.ம.க. கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடலூர் துணை மேயர் உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே சுப்பிரமணியபுரம் மெயின்ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 60 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. இதற்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு கொடியேற்றப்படவில்லை. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான்கவியரசு தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் அந்த கொடிக்கம்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கொடி ஏற்றுவதற்காக நேற்று முன்தினம் இரவு அக்கட்சியினர் ஏற்பாடு செய்தனர்.

சாலை மறியல்

இது பற்றி அறிந்த பா.ம.க.வினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு சுப்பிரமணியபுரம் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட இரு தரப்பினரிடமும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சீனிவாசன், அசோக்குமார், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, போலீஸ் சூப்பிரண்டுகள் கரிகால்பாரிசங்கர், ராஜேந்திரன், சபியுல்லா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பத்தில் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கொடி ஏற்றும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்தனர். பா.ம.க.வினரும் போலீசார் அனுமதியை மீறி கொடி ஏற்றுவதை அனுமதிக்க முடியாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இது பற்றி அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட இரு தரப்பு முக்கிய நிர்வாகிகளிடமும் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

நள்ளிரவில் கொடி ஏற்றம்

இதனிடையே சுப்பிரமணியபுரம் கிராமத்துக்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளரும், கடலூர் துணை மேயருமான தாமரைச்செல்வன், அங்குள்ள 60 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றினார். நள்ளிரவு 12.45 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியினர் திரண்டிருந்தனர். இதை அறிந்ததும் அங்கு பா.ம.க.வினர் நேற்று மீண்டும் திரண்டனர். அதேபோல் அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும் திரண்டு நின்றனர்.

பா.ம.க. நிர்வாகிகளிடம் மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கிராம மக்களிடம் அமைதியாக இருக்குமாறும், இந்த பிரச்சினை தொடர்பாக சட்ட ரீதியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

போலீசார் அனுமதி?

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் கூறுகையில், போலீசார் அனுமதி அளித்ததால் தான் நேற்று தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கொடி ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பா.ம.க.வினர் கொடி ஏற்றக்கூடாது என்று மறியலில் ஈடுபட்டனர். இதை கண்டித்து தான் அப்பகுதி மக்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மறியல் செய்தனர்.

அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு வாரம் கழித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது பற்றி சுப்பிரமணியபுரம் மக்களிடம் சென்று விவரித்தேன். அவர்கள் கேட்கவில்லை. இதனால் வேறுவழியின்றி கொடி ஏற்றினேன் என்றார்.

துணை மேயர் மீது வழக்கு

இருப்பினும் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படாத நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றியதாகவும், தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கடலூர் துணை மேயர் தாமரைச்செல்வன், ஜெயக்குமார், செந்தில்குமார், மாயவன், பழனிசாமி, பாக்கியராஜ் உள்பட 17 பேர் மீது தொண்டமாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் ஓம்சத்தியரேகா கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் சட்டவிரோதமாக ஒன்று கூடி சாலை மறியல் செய்ததாக பா.ம.க. மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புக்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story