கோடைக்காலத்தில் சிவகாசியில் குடிநீர் பிரச்சினை இருக்காது- மேயர் சங்கீதா இன்பம்
வெம்பக்கோட்டை அணையில் போதிய தண்ணீர் இருப்பதால் கோடைக்காலத்தில் சிவகாசியில் குடிநீர் பிரச்சினை இருக்காது என்று மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்தார்.
சிவகாசி
வெம்பக்கோட்டை அணையில் போதிய தண்ணீர் இருப்பதால் கோடைக்காலத்தில் சிவகாசியில் குடிநீர் பிரச்சினை இருக்காது என்று மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்தார்.
திடீர் ஆய்வு
சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், மண்டல தலைவர்கள் அழகு மயில், குருசாமி, சூர்யா, சேவுகன், கவுன்சிலர்கள் ராஜேஷ், சசிக்குமார், ரவிசங்கர், ஜெயராணி மற்றும் மாநகராட்சி அதிகாரி சாகுல் அமீது ஆகியோர் கொண்ட குழுவினர் சிவகாசி மாநகராட்சிக்கு பகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் வெம்பக்கோட்டை அணையை திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு தண்ணீர் வினியோகம் செய்யும் இடங்களை மேயர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் அங்குள்ள ஊழியர்களிடம் கோடைக்காலத்தை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டார்.
பேட்டி
இந்த திடீர் ஆய்வு குறித்து மேயர் சங்கீதா இன்பம் கூறியதாவது,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தற்போது தினமும் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு நபருக்கு 70 லிட்டர் தண்ணீர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த அளவு அதிகரித்து வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி இன்னும் 3 மாதங்களுக்கு இதே விகிதத்தில் தட்டுபாடு இன்றி தண்ணீர் சப்ளை செய்ய முடியும். அதனால் கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்சினை இருக்காது. இதற்கிடையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர் சிவகாசி மாநகராட்சி மக்களுக்கு தலா 135 லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்ய வாய்ப்பு ஏற்படும். மேலும் நகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனை போர்கால அடிப்படையில் சரி செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநகராட்சி அதிகாரி சாகுல்அமீது உடன் இருந்தார்.