அனல்மின்நிலைய தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
தூத்துக்குடியில் அனல்மின்நிலைய தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 440 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
அனல்மின்நிலையம்
தூத்துக்குடியில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் இணைந்து என்.டி.பி.எல். அனல்மின்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 2 மின்உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த அளவில் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணிகளில் மட்டுமே நிரந்தர பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வேலைநிறுத்தம்
இந்த நிலையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் என்.டி.பி.எல் நிர்வாகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்.எல்.சி. அனல்மின்நிலையத்தில் வழங்குவது போன்று என்.டி.பி.எல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ, பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு என்.டி.பி.எல் கிளை செயலாளர் அப்பாத்துரை, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாநில செயலாளர் ரசல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ராஜா, உப்பு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.சங்கரன் உள்பட திரளான ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மின்உற்பத்தி பாதிப்பு
இதனால் என்.டி.பி.எல் அனல்மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போதிய ஊழியர்கள் இல்லாததால் படிப்படியாக மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலையில் 560 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதனால் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் என்.டி.பி.எல். நிர்வாகம் சார்பில் மாற்று தொழிலாளர்கள் சிலரை அனல்மின்நிலையத்துக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வழிமறித்து திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.