இந்தி மொழியை வைத்து மற்ற மொழிகளை அழிக்கப்பார்க்கிறார்கள்: முதல்-அமைச்சர் குற்றச்சாட்டு


இந்தி மொழியை வைத்து மற்ற மொழிகளை அழிக்கப்பார்க்கிறார்கள்: முதல்-அமைச்சர் குற்றச்சாட்டு
x

ஒரே நாடு, ஒரே மதம் என்ற வரிசையில் இந்தி மொழியை வைத்து மற்ற மொழிகளை அழிக்கப்பார்க்கிறார்கள் என்று திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

திருவள்ளூர்,

ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. சார்பில், மொழிப்போர் தியாகிகள் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர். கலைஞர் திடலில் நேற்று மாலை நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு, பால் வளத்துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.

அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தி மொழி திணிப்பு

வீழ்ச்சியுற்று கிடந்த தமிழினம் பகுத்தறிவு கருத்துகளால், இன, மான, மொழி உணர்ச்சி பெற்று வீறுகொண்டு எழுந்த வீர வரலாற்றை ஒவ்வொரு தமிழரும் நினைவுகொள்கிற நாள்தான் வீர வணக்க நாள். மொழிப்போர் தியாகிகளை முன்னோடிகளாக பெற்றிருப்பதால்தான், இன்றுவரை மொழியை காப்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. இந்தி மொழியை திணிப்பதை தனது வழக்கமாக வைத்திருக்கிறது. ஆட்சி நிர்வாகத்தில் இந்தியை திணிப்பதில் தொடங்கி, கல்வி மூலமாக தாங்கள் ஆட்சிக்கு வந்ததே இந்தியை திணிப்பதற்குதான் என்று நினைக்கிறார்கள்.

அழிக்கப்பார்க்கிறார்கள்

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணவு, ஒரே பண்பாடு என்ற வரிசையில் ஒரே மொழியை வைத்து தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்கப்பார்க்கிறார்கள். மத்திய மந்திரி அமித்ஷாவின் தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு அறிக்கையானது, ஜனாதிபதிக்கு அனுப்பியதாக செய்திகள் வந்தது. அதில் முழுக்க, முழுக்க இந்திக்கு ஆதரவாக, இந்தியாவை இந்தி மயமாக்குவதாக இருக்கிறது.

இந்தி பேசும் மாநிலங்களை இந்தியை வலுப்படுத்தவே அதன் பரிந்துரைகள் இருக்கிறது. இதனை கண்டித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி தமிழக சட்டசபையில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பினோம். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் எப்போதும் தொடரும். தமிழை காக்கும் நமது முயற்சிகள் எப்போதும் தொடரும்.

இருமொழி கொள்கை

இந்தி மொழி திணிப்பை பா.ஜ.க. அரசு பட்டவர்த்தனமாக செய்கிறது. இந்தி மொழி நாள் கொண்டாடும் ஒன்றிய அரசு மற்ற மொழிகளின் நாள் கொண்டாடுவதில்லை. இந்தி மொழிக்கு தரப்படும் முக்கியத்துவம் மற்ற மொழிகளை புறக்கணிப்பதாக இருக்கிறது. அழிப்பதாகவும் அமைந்திருக்கிறது. ஆட்சியை தாண்டி அதிகாரம், ஆதிக்கம் செலுத்தும் மொழியாக இந்தியை பா.ஜ.க. அரசு கொண்டுபோய்க்கொண்டு இருக்கிறது. இணைப்பு மொழியாக உள்ள ஆங்கிலத்தை அகற்றுவதின் மூலம், அந்த இடத்தை இந்திக்கு தாரைவார்க்க பார்க்கிறார்கள்.

அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் ஆட்சி மற்றும் அலுவலக மொழிகளாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதைவிட்டு முழுக்க முழுக்க இந்தி மயமாக்குவது சரியா?. தமிழும், ஆங்கிலமும் என்ற இருமொழி கொள்கை தான் தமிழகத்தின் மொழிக்கொள்கை. ஏன் தி.மு.க.வின் மொழிக்கொள்கை என்பதே, தமிழ் உள்பட மாநில மொழிகள் இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்பது தான்.

வழக்காடு மொழி

இந்தி பேசாத மக்களின் மீது இந்தி மொழி திணிக்கக்கூடாது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இணை அலுவல் மொழியாக தமிழை அங்கீகரித்து, அனைத்து செயல்பாடுகளும் தமிழிலேயே இயங்க உரிய சட்டத்திருத்தம் செய்யவேண்டும். சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக தமிழை ஆக்கவேண்டும். இதுதான் நமது மொழிக்கொள்கை.

இந்தி திணிப்பை எதிர்ப்பதும், 'நீட்' தேர்வை எதிர்ப்பதும் இதற்காகத்தான். 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை சமஸ்கிருதத்தை வளர்க்க ரூ.643 கோடியை மத்திய அரசு செலவு செய்திருக்கிறது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடிசா ஆகிய மொழிகளுக்கு சேர்த்து செலவு செய்ததை விட 29 மடங்கு அதிகம். தமிழுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.23 கோடி. இவர்கள் தான் தமிழ் சங்கமம் நடத்துகிறார்கள். என்ன ஒரு வேஷம்? நாம் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல. ஒருவர் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படித்து கொள்ளலாம். ஆனால் மொழியை ஆதிக்க நோக்கில் திணிக்க நினைத்தால் ஏற்கமாட்டோம்.

புதிய முழக்கம்

கடந்த 20 மாத திராவிட மாடல் ஆட்சியானது தமிழுக்கும், தமிழகத்துக்கும் செய்த சாதனைகள் மகத்தானது. 5 ஆண்டுகள் செய்யவேண்டியதை 1½ ஆண்டில் செய்து தந்திருக்கிறோம். சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது கருணாநிதியின் முழக்கம். சொல்லாததை செய்வோம், சொல்லாமலேயே செய்வோம் என்பது எனது முழக்கம்.

பல திட்டங்களை இந்த ஆட்சியில் நிறைவேற்றி தந்துள்ளோம். நிதிநிலை மட்டும் கொஞ்சம் சீராக இருந்திருக்குமானால் இன்னும் பல சாதனைகளை நாம் செய்து காட்டியிருப்போம். இருந்தாலும் மிச்சம் உள்ள திட்டங்களையும் நிறைவேற்றுவோம். இது எனது உறுதிமொழி.

அ.தி.மு.க.வுக்கு பாடம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு பாடம்புகட்ட மக்கள் தயாராகி விட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலிலும் அக்கட்சிக்கு பாடம் கற்பிப்பார்கள். இந்தியை புகுத்துவதின் மூலமாக, தமிழை அழிக்க பார்ப்பதும், தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என சர்ச்சையை கிளப்பி தமிழகத்தின் அடையாளத்தை அழிக்கப்பார்ப்பதும், மாநில அதிகாரங்களை பறிப்பதின் மூலமாக சுயாட்சி தன்மையை சிதைக்க பார்ப்பதும் மிக மோசமான பண்பாட்டு படையெடுப்புகள்.

இது காலம் காலமாக நடக்கிறது. நாமும் எதிர்த்துக்கொண்டே இருக்கிறோம். பின்வாங்கியது இல்லை. இதை தமிழ் விரோத சக்திகள் எண்ணி திருந்தவேண்டும். இல்லையென்றால் மக்களால் திருத்தப்படுவீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ., தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர்கள் வேணு, சிவாஜி, சோழவரம் ஒன்றிய குழு தலைவர் ராஜாத்தி செல்வசேகரன், சோழவரம் தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் உள்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


Next Story