போதை பழக்கத்தால் குற்ற சம்பவங்களுக்கு ஆளாகிறார்கள்


போதை பழக்கத்தால் குற்ற சம்பவங்களுக்கு ஆளாகிறார்கள்
x

போதை பழக்கத்தால் குற்றசம்பவங்களுக்கு ஆளாகிறார்கள் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி தனியார் மகளிர் கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

குற்ற சம்பவங்களுக்கு ஆளாகிறார்கள்

நான் ஒரு அத்தலெடிக் விளையாட்டு வீரர். என்னுடைய சில நண்பர்கள் பல்வேறு போதைப் பொருட்களை எடுத்துக் கொள்வார்கள். அதன் மூலம் மனிதனுக்கு புத்துணர்ச்சியை தரும், இதை எடுத்துக் கொண்டால் காலம் செல்ல, செல்ல மனிதனின் உடலை பாதிக்கும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை கால அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். களவும் கற்று மற என்பதைப்போல அனைத்தையும் பயன்படுத்தி பார்ப்போம் என்ற நினைப்பு மனிதனுக்கு ஏற்படும். அதை பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் அதற்கு அடிமையாகி விடுவார்கள்.

போதை பொருள் பழக்கத்திற்கு அடிமை ஆவதன் மூலம் நமது சிந்தனைகள், உறவினர்களை மறந்து விடுவோம். நமது வாழ்க்கையின் கனவுகளை மறந்து விடுவோம். பல குற்ற சம்பவங்களுக்கு ஆளாகிவிடுவார்கள். நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படும். மூளை செயல்படாது. போதைப் பொருள் பயன்படுத்துவதினால் நமது குடும்பம் சின்னாபின்னமாகி விடும். அதிலிருந்து மீண்டு வருவது சாதாரண செயல் அல்ல.

தகவல் தெரிவிக்க வேண்டும்

போதைப் பொருட்களை பயன்பாட்டிற்கு வருவதற்காக பல குழுக்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த குழுக்களை அடையாளம் கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு வினாடியில் உங்களுடைய வாழ்க்கை மாறிவிடும். அதில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து மீண்டு வர முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் பாதுகாப்போடு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் பல்வேறு துறைகளின் அலுவலர்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, கலால் உதவி ஆணையர் பானு, மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில், மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஜெயின், கல்லூரி முதல்வர் இன்பவள்ளி, மாணவ, மாணவியர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.


Next Story