வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் 1 பவுன் நகை பறிப்பு


வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் 1 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இரணியல் அருகே வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் 1 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் 1 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

மூதாட்டி

இரணியல் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சுங்கான்கடை அருகே உள்ள களியங்காடு மேலதெருவை சேர்ந்தவர் செல்வமணி (வயது56), கட்டிட தொழிலாளி. இவருடைய தாயார் செல்லத்தாய் (80). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்தார்.

அப்போது அவர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம ஆசாமி வந்தார். அவர் செல்லத்தாயிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். இதையடுத்து செல்லத்தாய் அந்த ஆசாமிக்கு தண்ணீர் எடுத்துவர சென்றார்.

நகை பறிப்பு

அப்போது, செல்லத்தாயை பின்தொடர்ந்து சென்ற அந்த ஆசாமி திடீரென அவரது கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு வெளியே ஓடினார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த செல்லத்தாய் திருடன்... திருடன் என கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த ஆசாமி வாசலில் தயாராக நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.

பின்னர், இதுகுறித்து செல்வமணி இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story