தலைமை ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
வேட்டவலம் அருகே தலைமை ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
வேட்டவலம்
வேட்டவலம் அருகே ஓலைப்பாடி ஊராட்சி மாருதி நகர் பகுதியில் வசித்து வருபவர் முருகன், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி தேவி வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
இந்த நிலையில் முருகன், தேவி மற்றும் மகன் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
தரிசனம் செய்துவிட்டு நேற்று அதிகாலை வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் 2 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து முருகன் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.