பயோ உரம் வாங்க கட்டாயப்படுத்துகிறார்கள்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயோ உரம் வாங்க கட்டாயப்படுத்துகிறார்கள் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை-1 மேலாண்மை இயக்குனர்அரவிந்தன், செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சிவசவுந்தரவள்ளி, இணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் மீனா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மலர்விழி, வருவாய் கோட்டாட்சியர்கள் பவித்ரா, யோகஜோதி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தென்பெண்ணை ஆற்றுடன் கெடிலம் ஆற்றை இணைக்க...
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் அதிக அளவில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முன்கூட்டியே திறக்க வேண்டும். கலைநல்லூர் தரணி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பு நிலுவை பாக்கி தொகையை உடனே பெற்று தர வேண்டும். விவசாய பாசன வசதி பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றுடன் கெடிலம் ஆற்றை இணைக்க வேண்டும்.
ஏரிகளில் தனிநபர் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கரும்பு ஆலைக்கு பதிவு செய்யப்பட்ட கரும்புகளை முன்னுரிமை அடிப்படையில் கரும்பு வெட்டுவதற்கான அனுமதி வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் உரங்கள் வாங்கும் போது, உரங்களுடன் சேர்த்து பயோ உரங்களையும் கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். பயோ உரங்களை வாங்கவில்லை என்றால் உரங்கள் தர மறுக்கின்றனர். எனவே விவசாயிகளுக்கு தேவையான உரங்களை மட்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
விதை, உரம் இருப்பு
இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் பதில் அளித்து பேசியதாவது:-
ஜனவரி மாதம் அதிக அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பு நிலுவைத்தொகை பெற்றுத்தரவும், தென்பெண்ணை ஆற்றுடன் கெடிலம் ஆற்றை இணைப்பது குறித்தும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை மட்டும் வழங்க வேண்டும். பயோ உரங்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது.
வேளாண்மை விரிவாக்க மையங்களில் 157 மெட்ரிக் டன் விதைநெல், உளுந்து 64 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் 6.02 மெட்ரிக் டன், மணிலா 22 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. இதனை விவசரியகள் மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 4,211 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1,618 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,454 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5,966 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்போட் 901 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.