மடங்களையும், திருக்கோவிலையும் பாதுகாக்க முன்வர வேண்டும் சுசீந்திரத்தில் திருவாவடுதுறை ஆதீனம் பேச்சு


மடங்களையும், திருக்கோவிலையும் பாதுகாக்க முன்வர வேண்டும் சுசீந்திரத்தில் திருவாவடுதுறை ஆதீனம் பேச்சு
x

மடங்களையும், திருக்கோவிலையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று சுசீந்திரத்தில் திருவாவடுதுறை ஆதீனம் பேசினார்.

கன்னியாகுமரி

சுசீந்திரம்:

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சுசீந்திரம் கிளை மடத்தில் உள்ள நமச்சிவாய மூர்த்திகள் வணிக வளாகத்தின் மேல் தளத்தில் அம்பலவாணர் அரங்கம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், லட்சுமி ஹோமமும், நவக்கிரக ஹோமமும் நடைபெற்றது.

காலை 9.15 மணிக்கு சுசீந்திரத்தில் உள்ள கிளை மடத்தில் இருந்து மேல தாளத்துடன் முத்துக்குடை ஏந்தி திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் வருகை தந்து கோ பூஜை நடத்தி கல்வெட்டினை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து ஆதீனம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசுகையில், பாவம், புண்ணியம் இரண்டிற்குமே வினை உண்டு. தானம், தர்மம் செய்தால் மட்டுமே புண்ணியத்தை நாட முடியும். வினைக்கு ஏற்ற தண்டனையை இறைவன் நிச்சயம் தந்தருள்வார். புண்ணியம் செய்தால் மட்டுமே வினை தீர்க்க முடியும். பள்ளிகளில் மாணவர்கள் சைவ சித்தாந்த வகுப்புகளை கற்றுக்கொள்ள வேண்டும். திருக்கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டால் மட்டுமே ஆன்மா தூய்மையாகும். மடங்களையும் திருக்கோவிலையும் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.

மேலும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் உறுதியளித்தார்.

விழாவில் தொழில் அதிபர்கள், பக்த சங்கம் நிர்வாகிகள், ஆதீன தென் மண்டல மேலாளர் ராமச்சந்திரன், கல்வி நிறுவன தாளாளர் முத்துகிருஷ்ணன், சுசீந்திரம் கிளைமட ஆய்வர் வீரநாதன் மற்றும் சிவாச்சாரியார்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story