'லிப்ட்' கேட்பது போல் நடித்து வழிப்பறி -3 பேர் கைது; மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறி  -3 பேர் கைது; மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x

மதுரை அருகே லிப்ட் கேட்பது போல் நடித்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மதுரை


மதுரை அருகே லிப்ட் கேட்பது போல் நடித்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர் திருட்டு

மதுரை கல்லம்பல் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம்(வயது 21). நேற்று முன்தினம் இரவு இவர், தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களிடம் லிப்ட் கேட்பதுபோல் நடித்து 3 வாலிபர்கள் வழிமறித்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த செல்போன்களை கத்தியை காட்டி மிரட்டி பறித்துவிட்டு அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

மேலும், அந்த மர்மநபர்கள் ஒத்தக்கடை, புதுப்பட்டி, அப்பன்திருப்பதி பூண்டி விலக்கு ஆகிய பகுதிகளிலும் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இரவு நேர ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.

3 பேர் கைது

இதற்கிடையே, அப்பன்திருப்பதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் கள்ளந்திரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த, உத்தங்குடியை சேர்ந்த சுதர்சன் (21), அக்கினி (21), பிரவீன் குமார் (19) ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதும், சிலைமான், ஒத்தக்கடை, அப்பன்திருப்பதி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள், 2 வாள், பட்டாகத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சூப்பிரண்டு எச்சரிக்கை

இந்த வழிப்பறி சம்பவங்கள் நடந்த ஒரு மணி நேரத்தில், இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் உள்ளிட்ட போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பாராட்டினார்.

மேலும் மதுரை மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தொடர் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.


Next Story