வடலூரில் பெட்ரோல் பங்க் ஊழியர் வீட்டில் 5 பவுன் நகை, பணம் திருட்டு பட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம்
வடலூரில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் ஊழியர் வீட்டில் 5 பவுன் நகை, பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வடலூர்,
வடலூர் பார்வதிபுரம் வாகீசம்பிள்ளை நகரை சேர்ந்தவர் வேலு. இவர் நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி (55). வேலு தனது மனைவி ராமலட்சுமியுடன் நேற்று முன்தினம் காலையில் சொந்த ஊரான ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டையில் உள்ள விவசாய நிலங்களை பார்க்க சென்றார். பின்னர் மாலை 4.30 மணிக்கு வடலூருக்கு வந்து பார்த்தபோது வீட்டு பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன.
நகை, பணம் திருட்டு
மேலும் அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.14 ஆயிரத்தை காணவில்லை. கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் வடலூர் போலீசார் விரைந்து வந்து, திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகை மற்றும் அவர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.