வீட்டின் மேற்கூரையை உடைத்து 22 பவுன் நகை, ரூ.5¾ லட்சம் திருட்டு
உடுமலை அருகே வீட்டின் மேற்கூரையை உடைத்து 22 பவுன் நகை, ரூ.5¾ லட்சத்தை திருடிய வழக்கில் அக்காள்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
நகை-பணம் திருட்டு
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆண்டியக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மனைவி பழனியம்மாள் (வயது 60)விவசாயி. இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் செந்தில்குமார் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். செந்தில்குமாரின் மனைவி மற்றும் மகனுடன் பழனியம்மாள் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் பேரனுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவனை அழைத்துக்கொண்டு மருமகள் வேலூர் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பழனியம்மாள் வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள இளைய மகன் விஜயகுமார் வீட்டில் சென்று தூங்கியுள்ளார்.
காலையில் வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததுடன், சிமெண்டு தகடு பொருத்தப்பட்ட மேற்கூரை உடைக்கப்பட்டு உள்ளே உள்ள பொருட்கள் கலைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பழனியம்மாள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 22 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
தனிப்படை விசாரணை
இதுகுறித்து குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் குமரலிங்கம் காவல் நிலைய உதவியாளர் நாகராஜ், உடுமலை உட்கோட்ட தனிப்படை சிறப்பு உதவியாளர் பஞ்சலிங்கம், தலைமை காவலர் லிங்கேஸ்வரன், மணிகண்டன், முத்து மாணிக்கம் ஆகியோர் அடங்கிய குற்றப்பிரிவினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் செந்தில்குமார் பழைய வீட்டுக்கு அருகில் புதிய வீடு கட்டும் பணிகள் மேற்கொண்டுள்ளனர். அந்த பணிகளின் போது பொக்லைன் உதவியாளராக வேலை பார்த்த கல்லாபுரம் புரட்சித்தாய்புரத்தைச் சேர்ந்த முருகன் மகன் விஷ்ணு (19) இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
அக்காள்-தம்பி கைது
மேலும் திருடிய நகைகளை பூளவாடிபுதுநகரில் வசித்து வரும் இவருடைய அக்கா தங்கமாரி (30) என்பவர் உதவியுடன் அடகு வைத்து, பணத்தை ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தில் புதைத்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் விஷ்ணு மற்றும் அவருடைய அக்கா தங்கமாரி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை போலீசார் கைப்பற்றினர்.நகை, பணம் திருடிய வழக்கில் அக்கா, தம்பி கைது செய்யப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.