கத்திமுனையில் பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு


கத்திமுனையில் பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x
திருப்பூர்


மூலனூர் அருகே கத்தி முனையில் பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகைபறிப்பு

மூலனூர் அருகே உள்ள புதுப்பை நால்ரோடு பகுதியில் செல்லமுத்து என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி (வயது 57). இந்த நிலையில் நேற்று காலை 5 மணி அளவில் செல்லமுத்து மூலனூர் வாரச்சந்தையில் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சென்றுவிட்டார். இதனால் வீட்டில் லட்சுமி மட்டும் இருந்தார். அப்போது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதையடுத்து கதவை லட்சுமி திறந்தார். அப்போது 2 ஆசாமிகள் கத்தியுடன் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அந்த ஆசாமிகள் கத்தி முனையில் லட்சுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று வீட்டின் அலமாறியில் வைத்திருந்த 7¼ பவுன் தாலிக்கொடியை திருடிக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து மூலனூர் சென்று திரும்பிய செல்லமுத்துவிடம் நடந்த விபரம் குறித்த லட்சுமி கூறினார். இது பற்றி மூலனூர் போலீசில் செல்லமுத்து புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

புகாரின் பேரில் தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு மற்றும் மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்து சென்றனர். மேலும் அந்தபகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம ஆசாமிகளின் உருவம், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதிகாலை வேளையில் இது போன்ற நடந்த சம்பவம் மூலனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story