பனியன் தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
திருப்பூர் வீரபாண்டியில் பனியன் தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பனியன் தொழிலாளி
திருப்பூர் வீரபாண்டி வள்ளலார் நகர் 6-வது வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது37). இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி குடும்பத்துடன் திருப்பூர் குமார் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு விசேஷத்திற்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்ட இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அனைத்து பொருட்களும் சிதறிக் கிடந்ததோடு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க சங்கிலி மற்றும் தங்க மோதிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து கார்த்திக் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்றவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் திருட்டுப்போன நகையின் மதிப்பீடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.