வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை-பணம் திருட்டு
பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உறவினர் திருமணத்துக்கு...
பல்லடம் அருகே உள்ள செட்டிபாளையம் ரோடு, பாலாஜி நகரை சேர்ந்த அய்யாசாமி என்பவரது மகன் ஜோசப் ஸ்டாலின் (வயது 50). இவர் காற்றாலைகளில் பழுது பார்க்கும் பணி செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது சகோதரியின் மகள் திருமணத்திற்காக நேற்று முன்தினம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு விருதுநகருக்கு சென்றார். பின்னர் நேற்று மாலை மீண்டும் வீடு திரும்பினார்.
26 பவுன் திருட்டு
அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோசப் ஸ்டாலின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 26 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது.
இது குறித்து ஜோசப் ஸ்டாலின் பல்லடம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.