தில்லை மாகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா
குத்தாலம் அருகே நக்கம்பாடியில் உள்ள தில்லை மாகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே நக்கம்பாடி கிராமத்தில் தில்லை மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 10-ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 24-ந் தேதி பால்குடம் காவடி திருவிழா,25-ந் தேதி கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் குளக்கரையில் இருந்து கரகம்,அலகு காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் கோவிலை வந்து அடைந்தனர். பின்னர் கோவிலுக்கு அருகே அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் அம்பாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை நக்கம்பாடி கிராமமக்கள், கிராம சேவா சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.