திம்பம் மலைப்பாதையில்சாலையை கடந்த சிறுத்தை; வாகன ஓட்டிகள் அச்சம்


திம்பம் மலைப்பாதையில்சாலையை கடந்த சிறுத்தை; வாகன ஓட்டிகள் அச்சம்
x

திம்பம் மலைப்பாதையில் சாலையை கடந்து சென்ற சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். மலைப்பாதையில் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஈரோடு

தாளவாடி

திம்பம் மலைப்பாதையில் சாலையை கடந்து சென்ற சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். மலைப்பாதையில் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தமிழகம்-கர்நாடகம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. திம்பம் மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம் - கர்நாடகம் இடையே முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வெளியேறும் விலங்குகள் சாலையோரங்களுக்கு வந்து நின்றுகொள்கின்றன. சில சமயங்களில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுகின்றன.

துள்ளி குதித்து...

குறிப்பாக தாளவாடி, ஆசனூர், திம்பம், பவானிசாகர், பண்ணாரி வனப்பகுதிகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. மலைப்பாதையின் 24-வது கொண்டை ஊசி வளைவில் சரக்கு வாகனம் திரும்பியபோது சிறுத்தை ஒன்று துள்ளி குதித்து சாலையை கடந்து சென்றது. இதனை பார்த்த வாகன ஓட்டி அதிர்ச்சி அடைந்தார். மேலும் சரக்கு வாகனத்தில் இருந்தவர்கள் சிறுத்தையை தங்களுடைய செல்போன்களில் படம் பிடித்தனர்.

எச்சரிக்கை

சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று சிறுத்தை மறைந்து கொண்டது. சாலையை கடந்து சென்ற சிறுத்தையால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தையின் நடமாட்டம் அடிக்கடி நடைபெறுகிறது. இதனால் மலைப்பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், வாகனங்களை மலைப்பாதையில் நிறுத்த கூடாது என்றும் எச்சரித்தனர்.

மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு திம்பம் மலைப்பாதையில் அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story