திம்பம் மலைப்பாதையில் இரவுநேர போக்குவரத்து தடைக்கு அரசு எதுவும் செய்யமுடியாது அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடைக்கு அரசு எதுவும் செய்ய முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாதையாகும். வனவிலங்குகள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க கடந்த பிப்ரவரி 10-ந் தேதி முதல் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் அதிக பாரம் ஏற்றும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டது.
இருப்பினும் திம்பம் மலைப்பாதையில் உள்ள 2, 6, 8, 9 மற்றும் 26-வது கொண்டை ஊசி வளைவுகளில் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் ஆகியோர் திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை ஆய்வு செய்தார்கள்.
சட்டத்தை மதிப்போம்
அப்போது அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம், 'திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி விபத்து நிகழும் 2, 6, 8, 9, 26-வது கொண்டை ஊசி வளைவுகளில் விபத்து நடைபெறாமல் இருக்க சாலை விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தோம். அதிக பாரம் ஏற்றும் சரக்கு வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது குறித்து சட்டமன்றத்தில் பல்வேறு கேள்விகள் கேட்டப்பட்ட நிலையில் அதற்கு பதில் அளித்தோம். தடை விதிப்புக்கு அரசு சார்பில் எதுவும் செய்யமுடியாது சட்டத்தை மதித்து நடப்போம்'. என்றார்.