திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றது 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில்  நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றது  3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 29 Sept 2022 1:00 AM IST (Updated: 29 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதை

ஈரோடு

திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்பம் மலைப்பாதை

தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் கார், பஸ், லாரி, வேன், சரக்கு வாகனம் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

திம்பம் மலைப்பாதை குறுகிய வளைவுகளை கொண்டது. இதனால் மலைப்பாதை வழியாக அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நடுரோட்டில் நின்று விடுகின்றன. சில நேரம் ரோட்டில் கவிழ்ந்து விடுகிறது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

லாரி பழுது

இந்த நிலையில் நேற்று காலை ஈரோட்டில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருவுக்கு மாட்டு தீவனம் பாரம் ஏற்றிக்கொண்டு் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. காலை 9 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 15-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திடீரென நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றது.

இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டது. பின்னர் கிரேன் மூலம் லாரி தள்ளி ரோட்டோரம் நிறுத்தப்பட்டது.

அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீரானது. அனைத்து வாகனங்களும் அங்கிருந்து சென்றன.திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story