திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிருஷ்ணர், தர்மர் உள்பட பரிவார தெய்வங்கள் உள்ளன. இக்கோவிலில் 13 வருடங்களுக்கு பிறகு ஆனி மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றதுடன் தீமிதி திருவிழா தொடங்கியது.
இதைத்தொடர்ந்து தினமும் திரவுபதி அம்மன், கிருஷ்ணர், தர்மர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மேலும் மகாபாரத கதையும், வீதி உலாவும் இரவில் திருக்கல்யாணம், கழுமரம் ஏறுதல் மற்றும் பூ எடுத்தல் நிகழ்ச்சியும் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி திரவுபதி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் பூக்கரங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது பக்தி கோஷங்களை எழுப்பினர். மீன்சுருட்டி பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மீன்சுருட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீமிதி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.