சிவகிரி திரவுபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழா- திரளான பக்தர்கள் பங்கேற்பு


சிவகிரி திரவுபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழா-  திரளான பக்தர்கள் பங்கேற்பு
x

சிவகிரி திரவுபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

தென்காசி

சிவகிரி:

சிவகிரி திரவுபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூக்குழி திருவிழா

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டாரத்தில் பழமைவாய்ந்த கோவில்களில் ஒன்றான திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொருநாள் திருநாளும் ஒவ்வொரு சமூகத்தினரால் நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாள் இரவும் அம்மன் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளி சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது.

நேற்றைய தினம் பூக்குழி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையில் மூலவர் உட்பட அனைத்து சாமிகளுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை கோவில் முன் பக்தர்கள் பூக்குழி இறங்கும் திடலில் அக்னி வளர்க்கப்பட்டது.

2 பேர் காயம்

மாலை 6.30 மணி அளவில் கிருஷ்ணர், அம்மன், அர்ச்சுனர் ஆகிய சாமிகள் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளினர். பூங்குழி இறங்கும் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, என பக்தி கோஷமிட்டுக் கொண்டே கோவில் முன் உள்ள திடலிலிருந்து புறப்பட்டு சப்பரத்திற்கு முன் சென்று முக்கிய வீதிகள் வழியாக வந்து பூக்குழி இறங்க தொடங்கினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

அப்போது தேவிப்பட்டணத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரும், சிவகிரியை சார்ந்த பெண் ஒருவரும் கால் தடுமாறி உள்ளே விழுந்தனர். இருவருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. கூலித்தொழிலாளியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பக்தர்கள்

பூக்குழி திருவிழாவை காண சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர், தளவாய்புரம், சேத்தூர், கரிவலம்வந்தநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

சிவகிரி நகர பஞ்சாயத்து மூலமாக கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.




Next Story