நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது
நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்துள்ளது. இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நூல் விலை
பின்னலாடை துறையின் முக்கிய மூலப்பொருளான நூல் விலை அபரிமிதமான உயர்வு காரணமாக கடந்த 6 மாதகாலமாக தொழில் முடக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் மெல்ல மெல்ல மீண்டு வர தொடங்கியிருக்கிறது. கடந்த 3 மாதங்களாக நூல் விலை உயராமல் குறைந்து வருகிறது.
ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி நூல் விலை குறித்து நூற்பாலைகள் அறிவிக்கும். அதன்படி நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் நேற்று இந்த மாதத்துக்கான நூல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரக நூல் விலை கடந்த மாதத்தை விட கிலோவுக்கு ரூ.20 குறைந்துள்ளது.
கிலோவுக்கு ரூ.20 குறைவு
அதன்படி கிலோவுக்கு கோம்டு ரக நூல் (வரி நீங்கலாக) 16-ம் நம்பர் ரூ.251-க்கும், 20-ம் நம்பர் ரூ.254-க்கும், 24-ம் நம்பர் ரூ.264-க்கும், 30-ம் நம்பர் ரூ.274-க்கும், 34-ம் நம்பர் ரூ.287-க்கும், 40-ம் நம்பர் ரூ.307 ஆக குறைந்துள்ளது.
செமி கோம்டு ரகம் 16-ம் நம்பர் ரூ.241-க்கும், 20-ம் நம்பர் ரூ.244-க்கும், 24-ம் நம்பர் 254-க்கும், 30-ம் நம்பர் ரூ.264-க்கும், 34-ம் நம்பர் 277-க்கும், 40-ம் நம்பர் ரூ.297-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. வரி நீங்கலாக இந்த விலைக்கு நூல் விற்பனை செய்யப்படும் என்று நூற்பாலைகள் அறிவித்துள்ளன.
புத்தாண்டு பரிசு
நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்துள்ளதால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய சாதகமான சூழ்நிலையில் நூல் விலையும் குறைந்துள்ளது தங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு பரிசாக இதை நினைக்கிறோம். இதன் மூலம் ஆர்டர்களை தைரியமாக எடுத்து செய்ய முடியும் என்று உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.