திருப்பூரில் 65 அரங்குகளுடன் தேசிய ஆடை வர்த்தக கண்காட்சி


திருப்பூரில் 65 அரங்குகளுடன் தேசிய ஆடை வர்த்தக கண்காட்சி
x
திருப்பூர்


திருப்பூரில் 65 அரங்குகளுடன் நடைபெறும் தேசிய ஆடை வர்த்தக கண்காட்சி இன்று நிறைவடைகிறது.

ஆடை வர்த்தக கண்காட்சி

திருப்பூரை அடுத்த அணைபுதூர் ஐ.கே.எப். வளாகத்தில் இந்தியா நிட்பேர் அசோசியேசன் சார்பில் தேசிய ஆடை வர்த்தக கண்காட்சி தொடங்கியது. பியோ அமைப்பின் தலைவரும், இந்தியா நிட்பேர் அசோசியேசன் தலைவருமான ஏ.சக்திவேல் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் க.செல்வராஜ், கே.என்.விஜயகுமார், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், சைமா சங்க துணைத்தலைவர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன், டிப் தலைவர் மணி, டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த், டீமா தலைவர் முத்துரத்தினம், சிம்கா தலைவர் விவேகானந்தன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

கிளாசிக் போலோ நிறுவன நிர்வாக இயக்குனர் சிவராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசும்போது, "திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதிக்கு இணையாக உள்நாட்டு ஆடை வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக தொழில் செய்பவர்களை அடையாளம் கண்டு, அனைத்து பிராண்டுகளையும் ஒரே இடத்தில் சந்தைப்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

உள்நாட்டு உற்பத்தி

இந்தியா நிட்பேர் அசோசியேசன் தலைவர் ஏ.சக்திவேல் பேசும்போது, திருப்பூரில் முதல் முறையாக உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்காக இந்த ஆடை கண்காட்சியை தொடங்கி உள்ளோம். இந்த கண்காட்சியை ஆண்டுக்கு இரு முறை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் பேசும்போது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு ஆடை வர்த்தகத்தை பொறுத்தவரை ஒரு கூட்டு முயற்சியாகும். இதுபோன்ற கண்காட்சி தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றார்.

இந்த கண்காட்சியில் 65 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. நூல் மற்றும் துணி வகைகள், சாயங்கள், ரசாயனம், வீட்டு ஜவுளி, மூலிகை ஜவுளி, ஜவுளி தொடர்பான உபரி பாகங்கள், உள்ளாடைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், டீ-சர்ட்டுகள் உள்பட அனைத்து வகையான ஆடைகள் கண்காட்சி அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் இல்லை என்று கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


Next Story