திருப்பூரில் இருந்து சொந்த ஊர் புறப்பட்ட தொழிலாளர்கள்
திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டனர். சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதின. பிரதான சாலைகள் வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். நூல் விலை உயர்வு உள்ளிட்ட இக்கட்டான சூழ்நிலை காரணமாக பனியன் தொழில் முழுவீச்சில் நடைபெறவில்லை. இருந்தாலும் பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா கடந்த ஒரு வாரமாக ஏற்றுமதி நிறுவனங்களில் வழங்கப்பட்டன. அதன்பிறகு கடந்த 2 நாட்களாக உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் போனஸ் வழங்கின. இதன்காரணமாக நேற்றுமுன்தினம் இரவு முதல் வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி புறப்பட்டனர்.
கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று முன்தினம் விடிய, விடிய சிறப்பு பஸ்கள் அரசு போக்குவரத்து கழகத்தின் மூலமாக இயக்கப்பட்டன. பயணிகள் எந்த ஊருக்கு அதிகமாக வருகிறார்களோ அதன் அடிப்படையில் அந்தந்த வழித்தடத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ்களை இயக்கினார்கள். கோவில்வழி பஸ் நிலையத்திலேயே போக்குவரத்து கழக அதிகாரிகள் முகாமிட்டு பஸ்களை இயக்கும் பணியை மேற்கொண்டனர்.
வெளியூர் புறப்பட்ட தொழிலாளர்கள்
அதுபோல் நேற்று காலை முதல் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டன. கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு பயணிகள் சிரமம் இல்லாமல் பஸ்களில் ஏற வசதி செய்யப்பட்டு இருந்தன. 400 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். இதனால் போதுமான பஸ்கள் இருந்ததால் பயணிகள் நெரிசல் இல்லாமல் பஸ்களில் ஏறி சொந்த ஊர் சென்றனர். நேற்று மதியம் வரை 1½ லட்சம் பயணிகள் தென்மாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்றதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபோல் கரூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. அவினாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி, மைசூர், சத்தியமங்கலம், புளியம்பட்டி ஊர்களுக்கு குமார் நகர் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே 60 அடி ரோட்டில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. மாநகரின் பிரதான சாலைகளில் நேற்று காலை முதல் வாகன நெரிசல் அதிகரித்து காணப்பட்டன. இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்றன. ரெயில்வே மேம்பாலம், குமரன் ரோட்டில் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. போக்குவரத்து போலீசார், சிறப்பு போலீசார், பட்டாலியன் போலீசார் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரெயில் நிலையத்தில் கூட்டம்
ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் களை கட்டியது. கோவையில் இருந்து சென்னை செல்லும் ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டன. அதுபோல் மதுரை மார்க்கமாக செல்லும் ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தன. ரெயிலில் பயணிகள் முண்டியடித்து உடைமைகளை வைத்துக்கொண்டு ஏறினார்கள். முன்பதிவு வசதியில்லாத பெட்டிகள் நிரம்பி வழிந்தன. நிற்பதற்கு கூட இடமில்லாமல் இருந்தது. ரெயில் பெட்டியின் படிக்கட்டுகளில் தொங்கியடி பயணம் செய்தனர். ரெயில்வே போலீசார் அவர்களை உள்ளே செல்ல வலியுறுத்தினார்கள். சிலர் படிக்கட்டில் அமர்ந்து அபாயகரமான பயணத்தை மேற்கொண்டனர்.
ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மேலும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து, பட்டாசு எதுவும் உள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர். வடமாநில தொழிலாளர்கள் ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு நிலையத்தில் அதிகாலை 4 மணியில் இருந்தே காத்திருந்தனர். காலை 11 மணிக்கு அலுவலகம் திறக்கப்பட்டபோதிலும் முன்கூட்டியே காத்திருந்து டிக்கெட்டை பதிவு செய்ய காத்திருந்தார்கள்.