உறையூர் நாச்சியார் கோவிலில் தீர்த்தவாரி
உறையூர் நாச்சியார் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலானது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் திருமொழி, திருவாய் மொழி திருநாள் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் 15-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவிக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 16-ந்தேதி மாலை நடைபெற்றது. அன்று முதல் நேற்று வரை மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் வந்தடைந்தார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை ஹிரண்யவதம் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை 3 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளினார். தொடர்ந்து பரமபதவாசல் திறக்கப்பட்டு மாலை 4.15 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளிய பின்னர், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெற்றது. இரவு 11.15 மணிக்கு ஆழ்வார் ஆசார்யர் மரியாதையாகி மூலஸ்தானம் சென்றடைந்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது.