திருச்செந்தூர் அமலிநகரில் 3-வது நாளாகமீனவர்கள் குடும்பத்தினருடன்காத்திருப்பு போராட்டம்
திருச்செந்தூர் அமலிநகரில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் 3-வது நாளான நேற்று குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் புன்னக்காயல் உள்ளிட்ட 8 மீனவ கிராமத்தினரும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.
திருச்செந்தூர்:

காலவரையற்ற வேலைநிறுத்தம்
தமிழக சட்டமன்றத்தில் 2022-23 ம் ஆண்டு மீன்வளத்துறை மானிய கோரிக்கையில் திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டு காலமாகியும் இதுவரை தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படாததை கண்டித்தும், இப்பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தியும் அமலிநகர் மீனவர்கள் கடந்த 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் நாள் நாட்டு படகுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டமும், 2-வது நாளான நேற்று முன்தினம் குடும்பத்துடன் மனித சங்கிலி போராட்டமும், படகுகளில் கருப்பு கொடி கட்டி கடலுக்குள் நின்று போராட்டமும் நடத்தினர்.
8 மீனவ கிராமத்தினர் ஆதரவு
நேற்று 3-வது நாளாக வேலைநிறுத்தத்தை தொடர்ந்து மீனவர்கள், அமலிநகரில் உள்ள தந்தை யுசேபியஸ் கலையரங்கம் முன்பு குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புன்னக்காயல், சிங்கித்துறை கொம்புதுறை, வீரபாண்டியன்பட்டினம், ஜீவாநகர், ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாலை மீனவர்களும் கலந்து கொண்டனர்.