திருச்செந்தூரில்பக்தர்களிடம் நகை திருடியமூதாட்டி உள்பட 2 பேர் சிக்கினர


திருச்செந்தூரில்பக்தர்களிடம் நகை திருடியமூதாட்டி உள்பட 2 பேர் சிக்கினர
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில்பக்தர்களிடம் நகை திருடிய மூதாட்டி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் பக்தர்களிடம் நகைகள் திருடிய மூதாட்டி உள்பட 2 பெண்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5½ பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

நகைகள் திருட்டு

விளாத்திகுளம் அருகேயுள்ள கீழதட்டாப்பாறை பகுதியை சேர்ந்த ஆத்திமுத்து மனைவி மல்லிகா (வயது 60). இவர், கடந்த ஆங்கில புத்தாண்டு தினத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு கோவில் பஸ்நிலையத்தில் நின்ற போது அவரது 3 பவுன் சங்கிலி திருட்டு போனது. அதேபோல், நெல்லை மாவட்டம் நாங்குநேரி முத்துச்சாமி மகன் வானமாமலை (35) கடந்த 26-ந் தேதி திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்தார். கோவில் வளாகம் பகுதியில் நின்று கொண்டிருந்த அவரது 10 கிராம் எடையுள்ள தங்க சங்கிலி திருடப்பட்டது. மேலும் சாத்தான்குளம் இடைச்சிவிளையை சேர்ந்த காசி மகன் முத்துக்குமார் (25) என்பவரிடமும், கடந்த 26-ந் தேதி திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் 10 கிராம் தங்கச் சங்கிலி காணாமல் போனது.

தனிப்படை விசாரணை

இதுகுறித்து 3 பேரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் மேற்பார்வையில் திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கனகாபாய், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

2 பேர் சிக்கினர்

இதில் இந்த 3 திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது, நெல்லை பாலபாக்கியநகர் பரமசிவம் மனைவி ராமலட்சுமி என்ற பேச்சியம்மாள் (60) மற்றும் நெல்லை குமரேசன் காலனி சண்முகம் மனைவி கல்யாணி என்ற கலா (49) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அந்த இருவரையும் தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 5½ பவுன் தங்க சங்கிலிகளை போலீசார் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட ராமலெட்சுமி மீது நெல்லை மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தில் 5 திருட்டு வழக்குகளும், தென்காசி போலீஸ் நிலையத்தில் 8 திருட்டு வழக்குகளும், பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும் என மொத்தம் 17 வழக்குகள் உள்ளன. அதேபோல் கல்யாணி மீது கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் 6 திருட்டு வழக்குகளும், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், களக்காடு போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும் என மொத்தம் 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story