மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணம்
மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது மீனாட்சி சொக்கநாதர் கோவில். இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் மீனாட்சி பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று மீனாட்சி, சொக்கநாதர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நேற்று காலை 10 மணி அளவில் மீனாட்சி மற்றும் சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மணமேடைக்கு எழுந்தருளினர். தொடர்ந்து காப்பு கட்டப்பட்டு பூணூல் அணியப்பட்டும், கன்னிகாதானம் நடைபெற்றது. பின்னர் மீனாட்சி அம்மன் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. அப்போது அங்கிருந்த பெண் பக்தர்கள் தங்கள் கழுத்தில் புது திருமாங்கல்ய கயிற்றை அணிவித்து கொண்டனர். திருக்கல்யாணம் முடிந்த பிறகு மீனாட்சி மற்றும் சொக்கநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சியை தேவேந்திர குருக்கள் தலைமையில் ரமேஷ், நாகநாதன், மற்றொரு ரமேஷ் குருக்கள் செய்தனர். திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் கோவிலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்டும், மொய் எழுதியும் சென்றனர். விழாவின் 11-வது நாளான இன்று (புதன்கிழமை) மீனாட்சி மற்றும் சொக்கநாதர் பொன் ஊஞ்சலில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், கடைசி நாளான நாளை பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.