மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம்
சித்திரை திருவிழாவையொட்டி கோவில்களில் மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
சித்திரை திருவிழா
நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கொங்கர்குளம் கிராமத்தில் உள்ள ஆதிருத்ர லிங்கேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் ஆதிருத்ர லிங்கேஸ்வரருக்கும், மீனாட்சி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிவபக்தர்களும், பொதுமக்களும் செய்து இருந்தனர்.
திருக்கல்யாணம்
இதேபோல் சின்னாளப்பட்டியில் பொன்விழா மைதானத்தில் சித்திரை திருவிழாவை ஒட்டி நேற்று மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மாப்பிள்ளை, மணப்பெண் அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மணமக்களுக்கு நலுங்கு செய்யும் நிகழ்ச்சியும், அதன் தொடர்ச்சியாக சீர்வரிசை செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் கழுத்தில், சுந்தரேசுவரர் திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் புதிதாக தாலி மஞ்சள் கயிற்றை மாற்றிக் கொண்டனர்.
விழாவையொட்டி திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் மொய் எழுதும் நிகழ்ச்சியும், மணமக்களுக்கு பாலூட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன்பிறகு பொன்விழா மண்டபம் அருகே உள்ள பந்தலில் திருமண விருந்து நடைபெற்றது. இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.