கந்த சஷ்டி விழா: முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் பக்தர்கள் சாமி தரிசனம்
சேலத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம்,
சுகவனேசுவரர் கோவில்
சேலம் மாநகரில் உள்ள முருகன் கோவில்களில் கடந்த 25-ந் தேதி கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முக்கிய விழாவான நேற்று முன்தினம் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் முருகன் கோவில்களில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கந்த சஷ்டி விழாவையொட்டி சேலம் சுகவனேசுவரர் கோவிலில் உள்ள முருகனுக்கு நேற்று காலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதையடுத்து திருக்கல்யாணம் நடந்தது. அதைத்தொடர்ந்து திருக்கல்யாண கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காவடி பழனியாண்டவர் ஆசிரமம்
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் ஆசிரமத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் நேற்று மதியம் சீர்வரிசை கொண்டு வருதல், சிறப்பு யாகம் நடந்தது. இதையடுத்து பெண்கள் உரலில் மஞ்சள் இடித்தனர். அதைத்தொடர்ந்து சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் திருக்கல்யாண கோலத்தில் காவடி பழனியாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆசிரமத்துக்கு வந்த பத்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.
கந்தசாமி ஆறுமுகன் கோவில்
இதேபோல் சேலம் பெரமனூர் கந்தசாமி ஆறுமுகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் கந்தசாமி ஆறுமுகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கிச்சிப்பாளையம் சுப்பிரமணிய சாமி கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவில், அழகாபுரம் முருகன் கோவில், ஏற்காடு அடிவாரம் முருகன் கோவில், குமரகிரி தண்டாயுதபாணி கோவில் என மாநகரில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.