திருக்கோவிலூர்-அரகண்டநல்லூர் தரைப்பாலம் விரைவில் சீரமைக்கப்படும் அதிகாரி தகவல்
திருக்கோவிலூர்-அரகண்டநல்லூர் தரைப்பாலம் விரைவில் சீரமைக்கப்படும் அதிகாரி தகவல்
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரையும், விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரையும் இணைக்கும் வகையில் தென்பெண்ணையாற்றில் தரைப்பாலம் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு தென் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக குறிப்பிட்ட சில பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அதன் வழியாக வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த தரைப்பாலத்தை மீண்டும் சீரமைத்து போக்குவரத்து தொடங்குவது குறித்து திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதுகுறித்து நகர மன்ற தலைவர் டி.என். முருகன் கூறுகையில், தரைப்பாலம் பழுதின் காரணமாக பொதுமக்கள் திருக்கோவிலூர் மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், மாணவி-மாணவிகள் கடும் அடைந்து வருகின்றனர். இந்த தரைப்பாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு செல்லும் விவசாயிகள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பாதசாரிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்றார். அதை தொடர்ந்து முதற்கட்டமாக பாதசாரியாக செல்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பயன்படுத்தும் வகையில் தற்காலிகமாக தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு உறுதி அளித்தார். அப்போது திருக்கோவிலூர் நகர தி.மு.க. தலைவர் டி.குணா, நகராட்சி கவுன்சிலர்கள் ஐ.ஆர்.கோவிந்தராஜன், எஸ். சக்திவேல், தொ.மு.ச. நிர்வாகி டி.கே.சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.