திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு- நோயாளி காயம்
திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் நோயாளி ஒருவர் காயம் அடைந்தார்.
திருமங்கலம்,
திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் நோயாளி ஒருவர் காயம் அடைந்தார்.
அரசு ஆஸ்பத்திரி
திருமங்கலத்தில் அரசு ஆஸ்பத்திரியில் அவசரபிரிவு, பிரசவவார்டு, பொதுமருத்துவம், சித்தா, ஓமியோபதி, டயாலிசிஸ் பிரிவு உள்ளது. தலைமை மருத்துவர் உள்பட 18 மருத்துவர்கள், 30 செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலம்பட்டி, நடுவக்கோட்டை, கிழவனேரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் உள், வெளி நோயாளிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கின்றனர்.
மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
வாகன விபத்தில் சிக்குபவர்கள், தலைக்காயம் ஏற்படுபவர்கள், தற்கொலைக்கு முயல்பவர்களுக்கு இங்கு அவசரப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்படுவார்கள். முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக அவசர பிரிவில் சிகிச்சை பெறுபவர்களுக்கு படுக்கை வசதியுடன் வார்டுகள் உள்ளது. இந்நிலையில் அவசரப் பிரிவில் உள்ள வார்டில் கான்கிரீட் மேற்கூரை பூச்சு திடீரென கீழே விழுந்தது. சத்தம் கேட்டு நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அச்சத்துடன் காணப்பட்டனர்.
கோரிக்கை
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் பூச்சு பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. மேலும் செவிலியர்கள் பயன்படுத்தும் அறையிலும் மேற்கூரை பூச்சு விழுந்துள்ளது. மேலும் ஆங்காங்கே மேற்கூரை பூச்சுகள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் கட்டிடத்தை முழுமையாக இடித்து புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும். இல்லையென்றால் இதனை புனரமைக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மருத்துவமனையை ஆய்வு செய்து டாக்டர்களிடம் காயம் அடைந்த நோயாளி நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில் மருத்துவமனை வளாக கட்டிடத்தை கலெக்டர் ஆய்வு செய்து ஆஸ்பத்திரி கட்டிடத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.