சிறுபான்மை மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்


சிறுபான்மை மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்
x
திருப்பூர்


வேலம்பாளையம் பள்ளிவாசல் பிரச்சினையில் சிறுபான்மை மக்களுக்கு உறுதுணையாக இருப்பது என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அனைத்துக் கட்சி கூட்டம்

திருப்பூர் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக வேலம்பாளையம் பள்ளிவாசல் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோபால்சாமி (காங்கிரஸ்), நேமிநாதன் (ம.தி.மு.க.), ரவி (இந்திய கம்யூனிஸ்டு), முத்துக்கண்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சையது முஸ்தபா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), தம்பி வெங்கடாசலம் (கொ.ம.தே.க.), கர்ணன் (பார்வர்டு பிளாக் கட்சி), கலில் (அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு), நசிருதீன் (ம.ம.க.), பஷீர் (எஸ்.டி. பி.ஐ.), ஹபிபுர் ரகுமான் (பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா), தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். வேலம்பாளையம் பள்ளிவாசல் பிரச்சினையில் சிறுபான்மை மக்களுக்கு மத சார்பற்ற கட்சிகள் உறுதுணையாக இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

பொறுமையாக காக்க வேண்டும்

பின்னர் செல்வராஜ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளார். இந்து முன்னணி போன்ற சில அமைப்பினர் நாட்டில் கலவரம் ஏற்படுத்தி குளிர் காய நினைக்கிறார்கள். அதற்கு இஸ்லாமிய மக்கள் இறையாகி விடக்கூடாது. மதசார்பற்ற அனைத்து கட்சியினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர், அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். வேலம்பாளையம் பள்ளிவாசல் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நடக்க இருக்கிறது. விஷ சக்திகளின் விபரீத செயலால் நாசகார கும்பலுக்கு சிறுபான்மை மக்கள் இரையாகி விடக்கூடாது. அதை தடுத்து நிறுத்தும் முனைப்புடன் நாங்கள் உள்ளோம். எந்த பிரச்சினை என்றாலும் எங்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய கேட்டுள்ளோம். உங்களுடன் நாங்கள் உறுதுணையாக இருப்போம். பொறுமை காக்க வேண்டும் என்று தெரிவித்தோம். முஸ்லிம் மக்களும் அதற்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story