திருப்பூர் மாநகராட்சியில் ஒரு குரல் புரட்சி திட்டம் தொடக்க விழா


திருப்பூர் மாநகராட்சியில் ஒரு குரல் புரட்சி திட்டம் தொடக்க விழா
x
திருப்பூர்


திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் ஒரு குரல் புரட்சி திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஒருகுரல் புரட்சி திட்டம்

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை போன் மூலம் தெரிவிக்கும் வகையில் ஒரு குரல் புரட்சி திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திட்டத்தை தொடங்கி வைத்தார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் உடன் இருந்தனர்.

அரசு கூடுதல் தலைமை செயலாளர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்) சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, செல்வராஜ் எம்.எல்.ஏ., சுப்பராயன் எம்.பி., கலெக்டர் வினீத், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் செந்தூர் முத்து, ராதாகிருஷ்ணன், பி.ஆர்.செந்தில்குமார், தி.மு.க. தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், பகுதி செயலாளர் ராமதாஸ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், மண்டல தலைவர் கோவிந்தசாமி, கவுன்சிலர்கள் கோமதி, சாமிநாதன், காந்திமதி, நாகராஜ், சாந்தாமணி, திவாகரன், சுபத்ராதேவி, செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

கட்டணமில்லா தொலைபேசி எண்

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த புகார் கண்காணிப்பு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 155304 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மக்கள் தங்கள் அடிப்படை தேவை குறித்த புகார்களை தெரிவிக்கலாம். மேலும் 73057 12225 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்து புகார் தெரிவிக்கலாம். இதுதவிர www.smarttiruppur.comஎன்ற இணையதளம் மூலமாகவும் புகார் செய்யலாம்.

மாநகராட்சியின் 11 துறைகளின் கீழ் 310-க்கும் மேற்பட்ட புகார் வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. புகாரை பதிவு செய்யும்போது புகாருக்கு ஏற்ப புகைப்படங்களையும் இணைக்கலாம். புகார்களை பதிவு செய்யும்போது அவர்களின் செல்போன் எண்ணை கட்டாயம் பதிவு செய்து ஒருமுறை கடவுசொல் உபயோகப்படுத்தி புகார்களை பதிவு செய்ய முடியும்.

கண்காணிப்பு கேமரா

பதிவு செய்யும்போது பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் இருப்பிட முகவரி விவரங்கள் சேகரிக்கப்படும். இந்த விவரங்கள் மாநகராட்சி சார்பில் பொதுமக்களை தொடர்பு கொள்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் வகையில் 44 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை நேரடியாக இந்த மையத்தில் இருந்து கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. புகார்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்காவிட்டால் அடுத்த நிலை அதிகாரிக்கு புகார் சென்றடையும். மேயர், ஆணையாளர் வரை புகாரை கண்காணிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.


Next Story