வாகன போக்குவரத்து குறைந்த திருப்பூர் மாநகரம்


வாகன போக்குவரத்து குறைந்த  திருப்பூர் மாநகரம்
x
திருப்பூர்


டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் மாநகரில் உள்ளூர், வெளியூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் வேலைநிமித்தமாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக 3 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் உள்ள 10 ஆயிரம் பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக தொழிலாளர்களை வைத்து வியாபாரம் செய்யும் பெரும்பாலான ஜவுளி, வர்த்தக தொழிற்சாலைகள் தற்போது வெறிச்சோடி கிடக்கிறது. குறிப்பாக பரபரப்பாக காணப்படும் காதர்பேட்டையில் மக்கள் நடமாட்டம் குறைந்தும், பல கடைகள் மூடியும் காட்சி அளித்தது.

போக்குவரத்து குறைவு

தினசரி மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் தென்னம்பாளையம் மார்க்கெட், கார்டன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் உள்ள கடைகள் தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக கூட்டம் குறைந்து காணப்பட்டது. சில கடைகள் பூட்டியும் இருந்தன.

அதேசமயம் திருப்பூர் மாநகரம் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். ஆனால் தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள், தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டு சென்றதால் தற்போது வாகன போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. குமரன் ரோடு, அவினாசி ரோடு, தாராபுரம் ரோடு, பி.என்.ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைந்தே காட்சியளிக்கிறது.

வாகன நிறுத்துமிடம் நிரம்பியது

பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும்போது வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். இந்தநிலையில் தீபாவளியையொட்டி பெரும்பாலான மக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு சென்றனர். இதனால் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிரம்பி வழிந்தது. அதேபோல் நான்கு சக்கர வாகனங்களையும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்களில் வாகன ஓட்டிகள் நிறுத்தி விட்டு சென்றனர்.

சொந்த ஊர்களுக்கு செல்லாத வடமாநில இளைஞர்கள் மற்றும் பள்ளி விடுமுறை என்பதால் குடும்பத்துடன் பெரும்பாலானோர் திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவிற்கு சென்றனர். இதனால் பூங்காவில் மக்கள் கூட்டம் களை கட்டியது.


Next Story