மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்
-
திருப்பூரில் மக்களுடன் மேயர் திட்டத்தின்கீழ் மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் கூறினார்.
மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சியில் மக்களுடன் மேயர் திட்டத்தை மேயர் ந.தினேஷ்குமார் தொடங்கிவைத்தார். திட்டத்தை செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக தேவாங்கபுரம், 22-வது வார்டுக்குட்பட்ட குமரானந்தபுரம், கந்தசாமி லே-அவுட், ஓடக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஆய்வு செய்தார்.
அப்போது வகுப்பறை, கழிவறை பற்றாக்குறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளின் தேவை குறித்து தலைமையாசிரியர்களிடம் கேட்டறிந்தார். பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் மேயர் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
1 லட்சம் மரக்கன்றுகள்
திருப்பூர் மாநகராட்சியில் 136 பள்ளிகள் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த கல்வியாண்டில் மட்டும் 11,484 மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். இதனால் பள்ளிகளில் இடநெருக்கடியும், அடிப்படை தேவைகளும் அதிகமாக உள்ளது. ஏற்கனவே வகுப்பறைகள், கழிவறைகள் பற்றாக்குறை உள்ளது. அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு 10 பள்ளிகளாக தத்தெடுக்க முடிவு செய்துள்ளோம்.
அந்த பள்ளிகளில் ஆய்வு செய்து, வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் வசதிகளை நிறைவேற்றி கொடுக்க உள்ளோம். முதற்கட்டமாக மாநகராட்சி சார்பில் கழிவறைகள் கட்டவும், வகுப்பறை தரைதளங்களை சரி செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். இதைத்தொடர்ந்து மரம் நடுதல் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்களுக்கு ஒரு மரக்கன்று வழங்கப்பட்டு, அதற்கான ரசீதும் வழங்கப்படும். முதற்கட்டமாக மாநகராட்சி 3-வது மண்டலத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு 2 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த மரக்கன்றுகளை பராமரித்து, வளர்த்து மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். 5 ஆண்டுகளில் திருப்பூரை பசுமை மாநகராட்சியாக மாற்ற 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
பூங்காக்கள் மேம்படுத்தப்படும்
மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை வேலியமைத்து, தன்னார்வ அமைப்புகள் மரக்கன்றுகளை பராமரிக்க குடிநீர் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். திட்டத்தின் முத்தாய்ப்பாக இடம், மரக்கன்றுகள், தண்ணீர், ரசீது என அனைத்தையும் மாநகராட்சியே வழங்குகிறது.
இதற்கான தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும். பள்ளிகளுக்கு அடுத்தபடியாக பூங்காக்களை மேம்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பத்மாவதி, தி.மு.க. திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் சிட்டி வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.