பூங்காவில் குவிந்த பொதுமக்கள்
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்ததால் திருப்பூர் மாநகராட்சி வெள்ளிவிழா பூங்காவில் குவிந்த பொதுமக்கள் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர்.
பூங்கா
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்தது. அந்த விடுமுறை நேற்றுடன் முடிந்து இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்ததால் திருப்பூர் மாநகராட்சி வெள்ளிவிழா பூங்காவில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்தனர். காலை முதலே ஏராளமானோர் வரத் தொடங்கினர். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அங்கிருந்த பொம்மை ரெயில், படகு சவாரி உள்ளிட்ட விளையாட்டு மற்றும் ராட்டினங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.
பெரியவர்களும் ராட்டினங்களில் விளையாடியதுடன், ஒருவொருக்கொருவர் பேசி, மகிழ்ந்து, உணவு பொருட்களை சாப்பிட்டு பொழுதை கழித்தனர். இதேபோல் நேற்று பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால் வடமாநில இளைஞர்களும், இளம்பெண்களும் குழுவாகவும், ஜோடியாகவும் பூங்காவில் வலம் வந்தனர். மேலும் அவர்கள் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
காதல் ஜோடி
இதேபோல் காதல் ஜோடிகளும் நீண்ட நேரம் பேசி, பழகி காதலை வளர்த்துக் கொண்டனர். இந்த நிலையில் பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்று, சிறுவர்கள் விளையாடும் மோதும் கார் உள்ளிட்டவையும், ஒருசில விளையாட்டு சாதனங்களும் பழுதாகி பராமரிப்பின்றி உள்ளது. மேலும் செயற்கை நீரூற்றில் உள்ள தண்ணீர் மாற்றப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. இது பூங்காவிற்கு வரும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடும் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. எனவே பூங்காவில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.