திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
கட்சியின் நிர்வாகி உள்ளிட்டோரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
கட்சியின் நிர்வாகி உள்ளிட்டோரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்வாகி மீது தாக்குதல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பெரிய சிங்களாந்தி மேலத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 45). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளைச் செயலாளரான இவருக்கும், அதே பகுதி யில் வசிக்கும் மருதாசலத்திற்கும் முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று இரவு நடராஜன், அவருடைய மனைவி செல்வி மற்றும் அதே பகுதியை சேர்ந்த அமுதா உள்ளிட்டோரை மருதாச்சலம் உள்ளிட்ட 9 பேர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், நடராஜன், செல்வி மற்றும் அமுதா ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசில் நடராஜன் புகார் அளித்தார். அதன்பேரில், மருதாசலம், விக்னேஷ் உள்பட 9 பேர் மீது திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல, விக்னேஷ் கொடுத்த புகாரின்பேரில் நடராஜன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இந்தநிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 9 பேரையும் கைது செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன், தலைமையில் ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், நகர செயலாளர் கோபு மற்றும் கட்சியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.