திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு


திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
x

திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பிறவிமருந்தீஸ்வரர் கோவில்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறவிமருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் அஸ்வினி நட்சத்திர பரிகார தலமாகவும் காணப்படுகிறது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலாலயம் நடந்தது. தொடர்ந்து திருப்பணிகள் நாகை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் மேற்பார்வையில் நடைபெற்று வந்தன. பி்ன்னர் திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

நேற்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் 4 வீதிகளில் உள்ள நான்கு பிள்ளையார், அரச மரத்தடி பிள்ளையார், காளியம்மன் கோவில் ஆகியவற்றை சுற்றியுள்ள கோவில்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குடமுழுக்கு

தொடர்ந்து 6-ம் கால யாக சாலை பூஜைகள் முடிவடைந்ததும், கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் ராஜகோபுரம், கட்டக்கோபுரம், மூலவர் விமானம், அம்பாள் விமானம், அம்பாள் ராஜகோபுரம், வேதாரண்யேஸ்வரர், தியாகராஜர் உள்ளிட்ட கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

போக்குவரத்து மாற்றம்

விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூர், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் திருத்துறைப்பூண்டி நாகை கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு, புதிய புறவழிச்சாலை வழியாக திருவாரூருக்கு சென்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாதுகாப்பு பணி

விழாவையொட்டி திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில் பக்தர்களின் கூட்டத்தை கண்காணிக்கவும், திருட்டுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும் கோவிலில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. முன்னதாக கைலாய வாத்தியங்கள் முழங்கப்பட்டன.

ஏற்பாடு

குடமுழுக்கு முடிந்தும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், நெரிசல் ஏற்பட்டு கோவிலுக்குள் செல்லமுடியாமலும், வெளியே வரமுடியாமலும் சிரமப்பட்டனர். இதனை போலீசார் ஒழுங்குப்படுத்தி பக்தர்களை வரிசையாக அனுப்பிவைத்தனர். முன்னதாக பிறவிமருந்தீஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் மணவழகன், செயல் அலுவலர் முருகையன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story