அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருவள்ளுவர் சிலை
ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருவள்ளுவர் சிலையை, ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் வழங்கினார்.
கலந்துரையாடல் கூட்டம்
வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, தி.மு.க. சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பல அணிகள்
அ.தி.மு.க.வில் பல்வேறு அணிகள் உள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி, ஜெ.தீபா அணி, டிரைவர் அணி என்று எல்லாம் உள்ளது. ஆனால் நம்முடைய தி.மு.க.வில் செயல்படும் அணிகள் தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. அணிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே செயல்படுகிறது. இதேபோல பா.ஜ.க.வில் தற்போது பல அணிகள் உருவாகியுள்ளது. அது இ.டி. அணி, சி.பி.ஐ. அணி, ஐ.டி. அணி என உள்ளது. இவைகள் எல்லாம் நான்கு, ஐந்து மாதத்தில் வரவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டே செயல்படுகிறது.
மிரட்டி பார்க்கிறார்கள்
தி.மு.க.வை மிரட்டி பார்க்கின்றனர். நம்முடைய தலைவரையும் மிரட்டி பார்க்கின்றனர். அது நடக்காது. நம்முடைய தலைவர் யாருக்கும் பயப்படமாட்டார். பிரதமர் மோடியை பார்த்து பயப்படுவார்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்செல்வம்தான்.
அவர்கள் பயப்படுவது போன்று நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் கலைஞரால் வளர்க்கப்பட்டவர்கள். விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின்போது சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் கதிர்ஆனந்த், அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் வில்வநாதன், நல்லதம்பி உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ். ஞானவேலன் நன்றி கூறினார்.
திருவள்ளுவர் சிலை
முன்னதாக சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் சால்வை அணிவித்து திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கினார்.