திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


திருவள்ளுவர் சிலைக்கு  துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினம்

கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதையொட்டி சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு

இதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தற்போது திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும்பணி நடைபெற்று வருவதால் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதேபோல், கன்னியாகுமரி ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப்பகுதி போன்ற முக்கிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடலில் ரோந்து பணி

கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் குமரி மாவட்டத்தில் உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதன்படி, போலீசார் படகு மூலம் கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு சொந்தமான சோதனை சாவடிகளிலும் போலீசார் இரவு-பகல் பாராமல் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள அனைத்து லாட்ஜூகளிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தங்கி இருக்கிறார்களா? என்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story