திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளையில் மேலும் ஒருவர் கைது
திருவண்ணாமலையில் கைவரிசை காட்டிய ஏ.டி.எம். கொள்ளையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொள்ளைக்கு பயன்படுத்திய கன்டெய்னர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
ிருவண்ணாமலையில் கைவரிசை காட்டிய ஏ.டி.எம். கொள்ளையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொள்ளைக்கு பயன்படுத்திய கன்டெய்னர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை
திருவண்ணாமலை நகரில் கடந்த மாதம் 12-ந்தேதி அதிகாலையில் 2 ஏ.டி.எம். மையங்களிலும், போளூா் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு ஏ.டி.எம். மையத்திலும் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதில் இருந்த ரூ.72 லட்சத்து 79 ஆயிரத்தை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றனர்.
இதனைடுத்து வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் உத்தரவின் பேரில், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதும், இவர்கள் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து கொள்ளை சம்பவம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
தொடர்ந்து தனிப்படை போலீசார் கர்நாடகா, அரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு சென்று கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், 2 கார்களை பறிமுதல் செய்து உள்ளனர்.
மேலும் ஒருவர் கைது
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம், திஜாரா தாலுகா ஜவாந்திகுர்த் கிராமத்தை சேர்ந்த சிராஜுதின் (வயது 50) என்பவரை கர்நாடகா மாநில எல்லை அருகே தனிப்படையினர் கைது செய்தனர். மேலும் கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணத்தை கடத்தி செல்ல பயன்படுத்திய கன்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள சிராஜுதினிடம் விசாரணை நடத்தினால் தான் கொள்ளையடித்த பணத்தை எங்கு பதுக்கி வைத்து உள்ளனர் என்ற தகவல் வெளியே வரும் என்று தெரிவித்தனர்.