மாண்டஸ் புயல் எதிரொலி: தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக 25 செ.மீ மழை பதிவு...!
தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
சென்னை,
கடந்த 5-ந் தேதி வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது. இதற்கு 'மாண்டஸ்' என்று பெயரிடப்பட்டது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் முதல் புயல் இது ஆகும். நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்ற நிலையில், இரவில் தீவிர புயலாகவும் மாறி மிரட்டியது. தொடர்ந்து வங்க கடல் பகுதியில் நேற்று காலை வரை நிலைக்கொண்டு இருந்தது.
இதன் காரணமாக, தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பல பகுதியில் கன முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்தநிலையில் வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், மாண்டஸ் புயல் கரையை கடந்த போது, பலத்த காற்று வீசியது. மாண்டஸ் புயலானது இரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மாமல்லபுரத்தில் பெரும் பாதிப்பு இல்லை . தேவநேரி ரோடு கான்கிரீட் பகுதி இடிந்து விழுந்தது. நாகப்பட்டினம் ,காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலூரில் பெரும் பாதிப்பு ஏதும் இல்லை.
மாமல்லபுரம் அருகே கரையை கடந்த 'மாண்டஸ் புயல்' ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்தது. இன்று மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து பிற்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் கரையை கடந்த போது சென்னையில் 300 மரங்கள் சாய்ந்தன. சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், பனப்பாக்கத்தில் தலா 20 செ.மீ. மழை பதிவானது.
காஞ்சிபுரத்தில் 19 செ.மீ., செய்யாறில் 18 செ.மீ., ஆவடியில் 17 செ.மீ., திருத்தணி, காட்டுக்குப்பத்தில் தலா 16 செ.மீ. மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அயனாவரம், குன்றத்தூரில் தலா 15, அரக்கோணம், உத்திரமேரூர், பெரம்பூரில் தலா 14 செ.மீ. மழை பதிவானது.
கும்மிடிப்பூண்டி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், சோழவரம், பள்ளிப்பட்டுவில் தலா 13 செ.மீ. மழை பதிவானது. எம்.ஜி.ஆர். நகர், ஆலந்தூர், ஊத்துக்கோட்டையில் தலா 13, அம்பத்தூர், செங்குன்றத்தில் தலா 12 செ.மீ. மழை பொழிந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 11 செ.மீ., மீனம்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.