திருவண்ணாமலை அரசு பஸ் டிரைவர் உடல் மூங்கில்துறைப்பட்டு அருகே மீட்பு
தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட திருவண்ணாமலை அரசு பஸ் டிரைவர் உடல் மூங்கில்துறைப்பட்டு அருகே மீட்பு
மூங்கில்துறைபட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள அகரம்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் மகன் முருகன்(வயது 45). அரசு பஸ் டிரைவரான இவர் நேற்று முன்தினம் மாலை அகரம்பள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் இறங்கியபோது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதையறிந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தென்பெண்ணை ஆற்றில் இறங்கி முருகனை தேடினார்கள். ஆனால் அவரை காணவில்லை.
ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முருகனின் நிலை என்ன? அவா் என்ன ஆனார்? என்று வாணாபுரம் மற்றும் மணலூர்பேட்டை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் முருகனின் உடல் தென்பெண்ணை ஆற்றில் வருகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் மூங்கில்துறைபட்டு அருகே உள்ள சுத்தமலை தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள செடியின் இடுக்கில் கிடந்த முருகனின் உடலை மூங்கில்துறைப்பட்டு போலீசார் கண்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.